மும்பையில் உத்தவ் தாக்கரே பங்களா மீது டிரோன் பறந்ததால் பரபரப்பு - காவல்துறை விளக்கம்

டிரோன் பறந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை பாந்திராவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ பங்களா மீது டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கணக்கெடுப்பு பணிக்காக பறக்கவிடப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை பாந்திரா கிழக்கு பகுதியில் உத்தவ் சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ பங்களா அமைந்துள்ளது. இந்த இடம் அரசியல் ரீதியாக முக்கியத்துவமான பகுதியாகும். இந்தநிலையில் நேற்று “மாதோஸ்ரீ” பங்களா மீது டிரோன் ஒன்று வட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உத்தவ் சிவசேனா எம்.எல்.சி. அனில் பரப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
“மாதோஸ்ரீ பங்களா மீது டிரோன் பறந்த விஷயம் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். டிரோனை இயக்கியவரின் அடையாளத்தையும், வான்வழியாக படம் எடுத்ததற்கு பின்னால் உள்ள நோக்கத்தையும் கண்டறிய வேண்டும். இதன் பின்னால் ஏதேனும் பயங்கரவாத பின்னணி உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.
மாதோஸ்ரீ பலத்த பாதுகாப்புடன் கூடிய ஒரு குடியிருப்பாகும். முன் அனுமதி இன்றி மிகவும் உணர்திறன் வாய்ந்த, உயர் பாதுகாப்பு பகுதியில் டிரோன் பறக்க விடுவது அல்லது அதைக்கொண்டு படம் எடுப்பது ஒரு பெரிய விஷயமாகும்.
பாதுகாப்பு மண்டலத்திற்குள் நடந்த இந்த அத்துமீறல் கவலையை எழுப்பி உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்க இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தெளிவாகவும், விரிவாகவும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.” இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மும்பை துணை போலீஸ் கமிஷனர் மணீஷ் கல்வானியா இதுகுறித்து அளித்த விளக்கத்தில், “மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் அருகில் உள்ள பாந்திரா-குர்லா வளாக பகுதியில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக டிரோன் பறக்கவிடப்பட்டது. தயவுசெய்து இதுகுறித்து தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கவும்” என்றார்.






