இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா: மத்திய அரசு கொடுத்த பதில்

Photo Credit: PTI
இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்
புது டெல்லி,
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதிலிருந்து டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டு பொருட்கள் மீது வரி விதிக்கப்போவதாக அவர் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி, இந்தியா உள்பட பல நாடுகள் மீதான வரி விதிப்பை அறிவித்தார். பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், ஜூலை 9-ந் தேதி வரை வரி விதிப்பை ஒத்திவைத்தார். இந்த கால அவகாசம், ஆகஸ்டு 1-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக கடந்த வாரம் டிரம்ப் அறிவித்தார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதால், அபராதமும் விதிக்கப்படும் என்று அவர் கூறினார். இதற்கிடையே, டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், “ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி அதிக லாபத்துக்கு இந்தியா விற்று வருகிறது. அதனால் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப்போகிறேன்” என்று மிரட்டல் விடுத்தார்.
தொடர்ந்து நேற்று அளித்த பேட்டியில், “அடுத்த 24 மணி நேரத்தில், இந்தியா மீதான வரியை மிக அதிகமாக உயர்த்தலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் ரஷிய கச்சா எண்ணெயை வாங்கி வருகிறார்கள். அதன் மூலம் போருக்கு நிதியுதவி அளிக்கிறார்கள். அவர்கள் இப்படியே செயல்பட்டு கொண்டிருந்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்காது” என்று கூறினார்.இந்த நிலையில், இந்தியா பொருட்கள் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்தார்.
ஏற்கனவே விதித்த 25 சதவீதம் வரியுடன் தற்போது கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மொத்தம் இந்தியாவுக்கு எதிரான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு கூறியதாவது:“அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அமெரிக்காவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. ரஷ்யாவில் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை சமீப நாட்களாக குறிவைக்கிறது. இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். இந்தியாவின் இறக்குமதி சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டது. 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்தியா செயல்படுகிறது. ரஷியா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை விளக்கிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளது.






