பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்- தேஜஸ்வி யாதவ் அதிரடி


பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்- தேஜஸ்வி யாதவ் அதிரடி
x
தினத்தந்தி 15 Sept 2025 2:07 AM IST (Updated: 15 Sept 2025 1:23 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணியில் உள்ள தேஜஸ்வியின் இந்த பேச்சு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாட்னா,

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட அங்கு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைத்து உள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), காங்கிரஸ், இடதுசாரிகள், விகாஷீல் இன்சான் கட்சி, ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளை கொண்ட மகா பந்தன் கூட்டணியில் (இந்தியா கூட்டணி) இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

இந்த நிலையில், முசாபர்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகாரில் உள்ள 243 தொகுதிகளிலும் ஆர்.ஜே.டி. போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:"நாங்கள் மீண்டும் வருவோம். இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். பீகாரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் (243) நான் போட்டியிடுவதாகவே நினைத்துக் கொள்ளுங்கள். முசாபர்பூர், போச்சாஹன், கைக்கட், காந்தி போன்ற தொகுதிகளில் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்."இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தொகுதி

தேஜஸ்வியின் இந்த பேச்சு முக்கியமானதாகக் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பேச்சு மட்டுமல்ல. தேஜஸ்வி குறிப்பிட்ட முசாபர்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிக்கல்கள் இருக்கும் சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தேஜஸ்வி இவ்வாறு பேசியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

தேர்தலில் அதிக இடங்களைப் பெற பேரம் பேசும் உத்தியாகவும், ஆர்.ஜே.டி. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியாகவும் இதை பார்க்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

பீகாரில் சமீபத்தில் நடந்த வாக்கு திருட்டு யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்து தேஜஸ்வி யாதவ் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story