'பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' - நாட்டு மக்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து முப்படைகளில் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோருடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலில் பல அப்பாவி மக்களின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
இந்த பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்தியவர்கள் மட்டுமின்றி, தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களும் தண்டிக்கப்படுவார்கள். குற்றவாளிக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






