பிரேக் அப் செய்த காதலியை குத்திக் கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை

கோப்புப்படம்
கடைசியாக ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று காதலியை வரவழைத்து வாலிபர் குத்திக் கொலை செய்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் காதலியை குத்திக் கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த வாலிபர் சோனு பராய் (24 வயது). இவரும் மனிஷா யாதவ் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சோனுவுக்கு, மனிஷா வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் எட்டு நாட்களுக்கு முன்பு மனிஷா நாம் பிரிந்து விடலாம் என்று கூறி சோனுவை பிரேக் அப் செய்துள்ளார். இதனால் சோனுவுக்கு, மனிஷா மீது மீண்டும் சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலையில் வெளியில் செல்வதாக தனது தாயிடம் தெரிவித்த சோனு, சமையலறை கத்தியை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
மனிஷாவை தொடர்பு கொண்டு கடைசியாக ஒருமுறை சந்திக்க வேண்டும் என்று ஒரு முதியோர் இல்லத்திற்கு அருகே அழைத்துள்ளார். அங்கு வைத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சோனு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனிஷாவை குத்திக் கொலை செய்தார்.
இதைத் தொடர்ந்து சோனு தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






