நண்பர்களுடன் ஓட்டலுக்கு இரவு விருந்துக்கு சென்ற இளம்பெண்... போலீசாரின் செயலால் நடந்த விபரீதம்


நண்பர்களுடன் ஓட்டலுக்கு இரவு விருந்துக்கு சென்ற இளம்பெண்... போலீசாரின் செயலால் நடந்த விபரீதம்
x

ஓட்டல் அறையில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு குண்டலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் தனது நண்பர்கள் உள்பட 8 பேருடன் எச்.ஏ.எல். பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர்கள் அந்த ஓட்டலில் 3 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் அவர்கள் அனைவரும் ஓட்டலுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் முன்பதிவு செய்த அறையில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது அருகில் இருந்தவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தவே அவர்கள் எச்.ஏ.எல். போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் ஓட்டல் இருக்கும் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

பின்னர் அவர்களிடம் விருந்துக்கு வந்தது குறித்து விசாரித்தனர். மேலும் அங்கிருந்த வாலிபர்களிடம் போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை கைது செய்வதாகவும் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளனர்.

ஆனால் போலீசார் பணத்தை ரொக்கமாக செலுத்தும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த வாலிபர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். இந்த நேரத்தில் போலீசார் மிரட்டியதால் பயந்துபோன இளம்பெண் ஓட்டல் அறையின் பால்கனிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் ஓட்டல் சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியில் சிக்கி தலை, கை, கால்களில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை நண்பர்கள் மீட்டு உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அத்துடன் பணம் பறிக்க முயன்ற போலீசார் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story