டெல்லியில் பியூஷ் கோயலுடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி என்ற நிலை தற்போது வரை நீடித்து வருகிறது.
புதுடெல்லி,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. தி.மு.க., அ.திமு.க. என இரு துருவ அரசியலை நோக்கி நகர்ந்தது தமிழகம். ஆனால் இந்த முறை கள நிலவரம் மாறி இருக்கிறது. நான்கு முனை போட்டி என்ற நிலை தற்போது வரை நீடித்து வருகிறது.
ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்து கொள்ள இப்போதே கச்சை கட்டி இறங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவாக தொடர்ந்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பங்கு கோரிக்கை, வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்டுகள் மத்தியில் அதிக தொகுதிகள் எதிர்பார்ப்பு ஆகியவை சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.
அதுபோல எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. பெரும் எழுச்சியுடன் காணப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி மீண்டும் உறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அள்ள எடப்பாடி பழனிசாமி போட்டுள்ள ‘ஸ்கெட்ச்’ பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அ.தி.மு.க.வின் கூட்டணி கணக்குகள் கைகூடினால் மட்டுமே அது வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது அமித்ஷா இதனை கூறியுள்ளார். இதன்படி கூட்டணி இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ்கோயல் உறுதிபடுத்தினார்.
இந்த நிலையில், டெல்லியில் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் நிலவரம், தொகுதிப் பங்கீடு, பிரதமரின் சென்னை வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.






