2 பேரை காவலில் எடுத்து விசாரணை


2 பேரை காவலில் எடுத்து விசாரணை
x

போலி செல்போன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி

போலி செல்போன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உயர்ரக செல்போன்

புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள செல்போன் கடைக்கு கடந்த 19-ந் தேதி உயர் ரக நிறுவனத்தின் செல்போன்களை குறைவான விலைக்கு தருவதாக 2 பேர் தெரிவித்தனர். அதனை வாங்கி பார்த்தபோது, உயர்ரக நிறுவனத்தின் போலியான செல்போன் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கடையின் உரிமையாளர் ராஜ்குமார், பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த உமருல் பாரூக் (வயது 28), முகமது ஷுகைப்பு (26), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கஷ்கிப் (23), ஜிஸ்கான் சவுத்ரி (21), தாலிப் சவுத்ரி (23), முஸ்கைட் (30) ஆகிய 6 பேரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான...

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான உமருல் பாரூக், முகமது ஷுகைப்பு ஆகிய 2 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், துணி வியாபாரம் செய்யும் போது அவர்கள் 6 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதும், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் இருந்து குறைந்த விலைக்கு உயர்ரக நிறுவனத்தின் பெயரில் போலியான செல்போன்களை வாங்கி வந்து தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள், 35 ஏர் பேட், 15 புளூ டூத் ஹெட் செட், 6 பென் டிரைவ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story