2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலை மறியல்


2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலை மறியல்
x

திருக்கனூர் அருகே 100 நாள் வேலை கேட்டு 2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே 100 நாள் வேலை கேட்டு 2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

100 நாள் திட்டத்தில் வேலை

திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் சித்தேரி உள்ளது. இந்த ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் லிங்காரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை வேலைக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த காட்டேரிக்குப்பம் கிராம மக்கள் 'எங்கள் ஊர் ஏரியில் நீங்கள் எப்படி வந்து வேலை செய்யலாம்' என கேட்டு அவர்கள் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் காட்டேரிக்குப்பம் கடை வீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் காட்டேரிக்குப்பம் ஏரியில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

போட்டி போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த லிங்காரெட்டிபாளையம் கிராம மக்கள், தங்களுக்கும் அந்த ஏரியில் உரிமை இருப்பதால், வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி லிங்காரெட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே போட்டி போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களிடமும் காட்டேரிக்குப்பம் போலீசார், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக 2 கிராம மக்களிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஏரியில் யார் வேலை செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை 2 கிராம மக்களுமே ஏரி வேலையில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லிங்காரெட்டிபாளையம் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஒரே ஏரியில் வேலை கேட்டு 2 கிராம மக்கள் போட்டி போட்டு சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் காட்டேரிக்குப்பம், லிங்காரெட்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story