நர்சுகள் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


நர்சுகள் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளில் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புதுச்சேரி

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளில் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

3 பேர் மயக்கம்

புதுவை அரசின் சுகாதாரத்துறையில் கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 165 நர்சுகள் தங்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கக்கோரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை தொடங்கிய இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது. விடிய விடிய அவர்கள் இயக்குனர் அலுவலக வளாகத்திலேயே தங்கியிருந்தனர். இன்று காலையிலும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

அப்போது சவுந்தர்யா, சுபஸ்ரீ, அமுதவல்லி ஆகிய 3 பெண் நர்சுகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. சக நர்சுகள் அவர்களை தண்ணீர் தெளித்து தேற்றி ஆசுவாசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடக்கும் அலுவலக வாசல்கள் பூட்டப்பட்டு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்றம் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க.-அ.தி.மு.க. ஆதரவு

போராட்டம் நடக்கும் இடத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத் மற்றும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து நல்ல முடிவு காண்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர் கூறும்போது, 'கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்ய யார் தடையாக உள்ளனர்? புதிய நர்சுகள் எடுப்பதில் தவறில்லை. அதேநேரத்தில் தற்போது பணியாற்றும் நர்சுகளுக்கும் பணிவழங்க வேண்டும். ஏற்கனவே 300 நர்சு பணியிடங்கள் காலியாக உள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் கொடுக்கும் இந்த அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய இந்த 165 நர்சுகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? என்றார்.

மேலும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோரும் அங்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை நர்சுகள் ஏற்கவில்லை.

ரங்கசாமி பேச்சுவார்த்தை

இதனிடையே இன்று மாலையில் அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று நர்சுகள் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வருங்காலத்தில் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது 3 மாதம் பணிநீட்டிப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

தற்போது பணிநிரந்தரம் செய்யாததால் அரசு பணிக்கு தகுதியான வயதைவிட தங்களுக்கு அதிக வயதாகிவிடும் என்று நர்சுகள் வேதனையுடன் தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையை கவனமாக கேட்டுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது பதவிக்காலத்திலேயே உங்களுக்கு நல்லது செய்வேன் என்று உறுதியளித்தார்.

போராட்டம் வாபஸ்

இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட நர்சுகள், சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பேசிய விவரங்களை தெரிவித்தனர். முதல்-அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ்பெறலாம் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஒட்டுமொத்தமாக கலந்துபேசி போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாலை 6 மணி அளவில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை காலி செய்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.


Next Story