மின்தடையால் இருளில் மூழ்கிய அரசு அலுவலகம்


மின்தடையால் இருளில் மூழ்கிய அரசு அலுவலகம்
x

வேலைவாய்ப்பு முகாம் நடந்த போது மின்தடை ஏற்பட்டதால் வேலைவாய்ப்பு அலுவலகம் இருளில் மூழ்கியதால் இளைஞர்கள், இளம்பெண்கள் அவதியடைந்தனர்.

புதுச்சேரி

வேலைவாய்ப்பு முகாம் நடந்த போது மின்தடை ஏற்பட்டதால் வேலைவாய்ப்பு அலுவலகம் இருளில் மூழ்கியதால் இளைஞர்கள், இளம்பெண்கள் அவதியடைந்தனர்.

வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழிலாளர் துறை வளாகத்தில் இன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த முகாமில் 7 தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

இதில் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

இருளில் மூழ்கியது

முகாம் தொடங்கிய சிறிது நேரத்தில் தட்டாஞ்சாவடி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கியது. வழக்கமாக மின்தடை ஏற்பட்ட உடன் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். ஆனால் நீண்டநேரமாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனால் முகாமுக்கு வந்திருந்தவர்கள் வரிசையில் நின்றபடி அவதியடைந்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்கள் செல்போன் மற்றும் டேபிள் விளக்குகள் மூலம் அந்த பணியை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.


Next Story