விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி


விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி
x

வயல்களில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

திருபுவனை

வயல்களில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

டிஜிட்டல் மின்மீட்டர்

புதுச்சேரி மாநிலத்தில் விவசாய நிலங்களில் தற்போது பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் திடீரென மின்துறை தனியார் பங்களிப்புடன் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கியது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி

ஆனாலும் அரசு தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் புதுச்சேரி மாநில விவசாய சங்கம் சார்பில் டிஜிட்டல் மின் மீட்டருக்கு எதிராக மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் இருந்து மோட்டார் சைக்கிள் பிரசார பேரணி தொடங்கியது.

விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி தலைவர் கீதநாதன் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தார். விவசாய சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, கருணாகரன், பொன்பிரகாஷ், திருமால் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.மாநில செயலாளர் பெருமாள், பாகூர் கொம்யூன் செயலாளர் பெருமாள் உள்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

மோட்டார் சைக்கிள் பயணம் கலிதீர்த்தாள் குப்பம், ஆண்டியார்பாளையம், குச்சிப்பாளையம், பி.எஸ்.பாளையம், திருக்கனூர், கொடாத்தூர், சந்தை புதுக்குப்பம், செல்லிப்பட்டு, சன்னியாசிகுப்பம், திருவண்டார்கோவில் வழியாக திருபுவனையை அடைந்தது. பிரசார பேரணியின்போது டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தாதே, இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே, மின்துறையை தனியார் மயமாக்காதே என விவசாயிகள் வலியுறுத்தினர்.

முன்னதாக விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணியால் மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை திருபுவனை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.


Next Story