உயர்ரக செல்போன் என்று போலிகளை விற்று மோசடி

புதுவையில் உயர்ரக செல்போன் என்று கூறி போலி சீன தயாரிப்பு செல்போன்களை விற்று மோசடியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவையில் உயர்ரக செல்போன் என்று கூறி போலி சீன தயாரிப்பு செல்போன்களை விற்று மோசடியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீன தயாரிப்பு
செல்போன் மோகம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி ஆசாமிகள் சிலர் உயர்ரக போன்களை குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.
புதுவையில் பாலக்காடு பகுதியை சேர்ந்த 2 பேர், உயர்ரக செல்போன் என்று கூறி வசதிபடைத்தவர்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் கடை வைத்திருப்பவர்களிடம் அவசர தேவைக்கு பணம் தேவை என்பதால் குறைந்த விலைக்கு தருவதாக கூறி சீன தயாரிப்பு செல்போன்களை விற்றுள்ளனர்.
ஒருவர் சிக்கினார்
குறிப்பாக ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் என்று கூறி அதைவிட ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் குறைத்து விற்பனை செய்துள்ளனர். உயர்ரக செல்போன்கள் வைத்திருக்கும் அட்டைபெட்டிக்குள் அடைத்து அதை விற்பனை செய்துள்ளனர்.
ஆனால் அவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது. இந்த செல்போன்களை அண்ணாசாலையில் உள்ள கடையொன்றில் விற்க முயன்ற ஒருவரை கடை ஊழியர்கள் பிடித்து பெரியகடை போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவருடன் வந்த மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.
பறிமுதல்
அந்த நபரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடமிருந்து போலியான செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உயர்ரக செல்போன்கள் போன்று போலியான செல்போன்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? அவர்களின் பின்னால் உள்ள சதிகும்பல் எது? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.