பல்கலைக்கழகத்தில் 5 வாகனங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ்


பல்கலைக்கழகத்தில் 5 வாகனங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ்
x

தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கியை செலுத்தாததால் புதுவை பல்கலைக்கழகத்தின் 5 வாகனங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

புதுச்சேரி

தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கியை செலுத்தாததால் புதுவை பல்கலைக்கழகத்தின் 5 வாகனங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

புதுவை பல்கலைக்கழகம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்க கூடம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனம் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கருத்தரங்க கூடம் கட்ட ஒதுக்கிய நிதி குறைவாக இருப்பதாகவும், கூடுதல் நிதி வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தனியார் கட்டுமான நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

இதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதால், தனியார் நிறுவனம் புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தொகையை தவணை முறையில் பல்கலைக்கழக நிர்வாகம் செலுத்தி வந்தது. இருப்பினும் ரூ.1 கோடியே 38 லட்சத்து 267 பாக்கி இருந்தது.

ஜப்தி நடவடிக்கை

இந்தநிலையில் பாக்கி தொகையை செலுத்தாததால் பல்கலைக்கழக வாகனங்களை ஜப்தி செய்ய புதுவை 3-வது மாவட்ட கூடுதல் நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் பல்கலைக்கழகத்திற்கு கோர்ட்டு அமீனா வெங்கிட்டு மற்றும் ஊழியர்கள் நேற்று சென்றனர். அங்கு ஒரு பஸ், ஒரு வேன், 3 கார்களை ஜப்தி செய்வதற்கான நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்களிடம் பல்கலைக்கழக அதிகாரிகள் காலஅவகாசம் கேட்டனர். அதன்படி பல்கலைக்கழக அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி ரூ.1 கோடியே 38 லட்சத்து 267-க்கான காசோலையை வழங்கினர். அதையடுத்து நீதிபதி, பல்கலைக்கழகத்தில் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

மேலும் பல்கலைக்கழகம் தனியாருக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகைக்கான வட்டி செலுத்துவது தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) தள்ளி வைக்கப்பட்டது.


Next Story