கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்


கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்
x

புதுவையில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி இன்று தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுவையில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி இன்று தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

சேறும் சகதியுமான சாலை

புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் 2 தனியார் பள்ளிகளும், ஒரு தனியார் கல்லூரியும் இருக்கின்றன. தற்போது கொம்பாக்கம் வழியாக வில்லியனூர் செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலை தோண்டப்பட்டது. அதனை சரிவர மூடாததால் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சிறு மழை பெய்தால் கூட சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதி அடைகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலை சகதி காடாக மாறியது. இதனால் அவதிக்குள்ளான கல்லூரி மாணவர்கள் சாலையை சீரமைக்க கோரி கல்லூரி முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story