புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் திடீர் நிறுத்தம்


புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகள் திடீர் நிறுத்தம்
x

புதுவையில் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய பஸ்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.

புதுச்சேரி

வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதிய பஸ்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.

தடுப்புகள் அமைக்கும் பணி

புதுவை புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பகுதி பகுதியாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள காலியிடங்களில் தொழிலாளர்கள் தடுப்புகளை அமைத்தனர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

இந்தநிலையில் புதுவை நகரம் மற்றும் கிராமப் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் இன்று தடுப்புகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக ஆங்காங்கே டிரில்லர் எந்திரம் மூலம் துளையிடப்பட்டது. இதுபோன்று தடுப்புகள் அமைப்பதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பஸ்நிலைய பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாற்று இடங்களை தந்துவிட்டு பணிகளை செய்யுமாறு கூறி தொழிலாளர்களிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பணிகள் நிறுத்தம்

அப்போது ஆட்டோ டிரைவர்களும் அங்கு வந்து தங்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதுவரை பணிகளை செய்யவிடமாட்டோம் என்று எச்சரித்தனர். வியாபாரிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்ததுடன் பாதியிலேயே பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை நிறுத்தினர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கு உருளையன்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பெரிய மார்க்கெட், புதிய பஸ் நிலையம் என ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்புவதால் இந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.


Next Story