விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு


விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு
x

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கு தற்போது வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விதவிதமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகளுக்கு தற்போது வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தையொட்டி ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் புதுவையில் பல இடங்களில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரமாகி வருகிறது. விதவிதமான விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி புதுவை-திண்டிவனம் சாலையில் நாவற்குளம் பகுதியில் 5 அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் புதுவை நகர பகுதிக்கும், வானூர், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ராஜ அலங்காரம்

இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில் 'இந்த ஆண்டு வித்தியாசமான வடிவில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் வைக்கப்படுவது போல் ராஜஅலங்கார விநாயகர் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை தற்போது உயர்ந்துள்ளதாலும் நீர்நிலைகள் மாசு ஏற்படாத வகையில் காகிதங்கள், அட்டைகள் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுவதாலும் செலவு அதிகமாகிறது.

இதனால் சிலைகளுக்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிலைகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு வகையான சிலைகள் தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம் என்றனர்.


Next Story