பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை


பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை
x

உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் 13 ஆண்டுகளாக 1,500 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் 740 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். மீதமுள்ள வவுச்சர் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பை சேர்ந்த வவுச்சர் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு வவுச்சர் ஊழியர்கள், உயர்த்தி அறிவிக்கப்பட்ட சம்பளத்தை விரைவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகத்தை இன்று மதியம் 2 மணியளவில் முற்றுகையிட்டு, அலுவலக வராண்டாவில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்குவதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.Next Story