புதிய அமைச்சர் நியமனம் எப்போது?


புதிய அமைச்சர் நியமனம் எப்போது?
x

புதிய அமைச்சர் நியமனம் செய்வது எப்போது என்பதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி

'என் மண் என் தேசம்' விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

நினைவு தூண்

பிரதமர் மோடி மாதந்தோறும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பேசி வருகிறார். இதன்மூலம் நாட்டில் உள்ள மக்களின் எண்ணங்களை தெரிந்து கொண்டு சிறந்த முடிவுகளை எடுக்கிறார். அதனை செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறார். நாட்டின் வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்கள் பிரதமர் மோடி கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார்.

நம் நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்பதற்காக 'என் மண், என் தேசம்' என்ற விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வார்த்தையை சொல்லும் போதே நமக்கு தேசப்பற்று வருகிறது. புனித கலசம் மூலம் நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து மண் சேகரிக்கப்பட்டு, அதனை மொத்தமாக கலந்து டெல்லியில் நினைவு தூண் நிறுவப்படுகிறது.

வழிநடத்தி செல்கிறார்

இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்களும், பல இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர். நம் நாடு அதிக மக்கள் தொகை கொண்டதாகும். எத்தனை வித்தியாசம் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு தான் நம் நாட்டின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. நமது நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற வகையில் நமது பிரதமரின் எண்ணம் உள்ளது.

இந்திய நாடு இன்று உலக அளவில் சிறந்த நாடாக திகழ்கிறது. பிரதமர் உலக அளவில் சிறந்த தலைவராக திகழ்கிறார். இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற பிரதமர் முயற்சி செய்து வருகிறார். அவர் கூறியது போல புதுச்சேரி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.

கல்வியில் 100 சதவீத தன்னிறைவு பெற்ற மாநிலமாக கொண்டு வந்துள்ளோம். பள்ளி, கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் சுகாதார வசதிகள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க செய்துள்ளோம். புதுச்சேரியில் மருத்துவம், சுற்றுலாவையும் மேம்படுத்தி உள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அழைத்து பேசுகிறேன்

விழா முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், புதிய அமைச்சர் நியமனம் எப்போது?, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் உள்ள குழப்பம் குறித்து நிருபர்கள் கேட்ட போது, 'நியமனம் செய்யும் போது உங்களை அழைத்து பேசுகிறேன்' என்று கூறி விட்டு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


Next Story