பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் - பொதுமக்கள் இறுதி அஞ்சலி


பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடல் - பொதுமக்கள் இறுதி அஞ்சலி
x
தினத்தந்தி 7 July 2024 1:14 AM GMT (Updated: 7 July 2024 1:34 AM GMT)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில், 11 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) அயனாவரத்தில் குடியிருந்து வந்த அவர், தற்போது பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலையில் அவர் அங்கு சென்று கட்டிடப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தார். இரவு 7.15 மணி அளவில், 8 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

உணவு வினியோக ஊழியர்கள் போர்வையில் கொலையாளிகள் தன்னை நெருங்கியதை அறிந்து ஆம்ஸ்ட்ராங் உஷார் ஆவதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அவரது சகோதரர் வீரமணி (65), நண்பர் பாலாஜி, கார் டிரைவர் அப்துல் கனி ஆகியோருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது.

பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு ஆம்புலன்சு வாகனம் மூலம் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இரவோடு, இரவாக கொண்டு செல்லப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திலும், ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முன்பும் குவிய தொடங்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒரு கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டதால் அரசியல் களமும் அனலானது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அவரது சகோதரர் வீரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கர்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கும்பல் தப்பி ஓடி மோட்டார் சைக்கிளில் செல்வது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி, கொலையாளிகள் யார் என்பதை விசாரித்து வந்தனர். அதன் அடிப்படையில் கொலை நடைபெற்ற 3 மணி நேரத்துக்குள் 8 பேர் கும்பலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையம் சாவடி தெருவை சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சிவசக்தி (26) ஆகிய 3 பேர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்தும் தனிப்படை போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் கைது செய்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 8 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதன்படி பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Next Story