கோவை: தாயை பிரிந்து தனியாக தவித்து வரும் குட்டி யானை


கோவை: தாயை பிரிந்து தனியாக தவித்து வரும் குட்டி யானை
x
தினத்தந்தி 6 Jun 2024 5:27 AM (Updated: 7 Jun 2024 4:00 AM)
t-max-icont-min-icon

குட்டியானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை,

கோவை மருதமலை வனப்பகுதியில் பெண் யானை உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் வனப்பகுதியில் படுத்து கிடந்தது. அதன் அருகே 4 மாத குட்டி யானையும் நின்றது. வனத்துறையினர் பொக்லைன் மூலம் பெண் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கிடையே, யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது தாய் யானையிடம் இருந்து குட்டி யானை பிரிந்து மற்ற யானை கூட்டத்துடன் சுற்றி திரிந்தது.

இந்தநிலையில் குட்டி யானை நேற்று காலை விராலியூர் அருகே உள்ள பச்சான் வயல் என்ற இடத்தில் தனியாக தவித்தபடி நின்றது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு ஜீப்பில் ஏற்றி கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள யானை மடுவு பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த குட்டி யானைக்கு புட்டி பால் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குட்டி யானையை தாயுடன் சேர்ப்பதற்காக தாய் யானை நடமாடும் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். குட்டி யானை விடப்பட்ட பகுதியில் இருந்து தாய் யானை 200 மீட்டர் தொலைவில் நின்று வருவதாகவும், தாய் யானையை சுலபமாக கண்டுபிடித்து குட்டி யானை தாயுடன் சேர்ந்துவிடும் என்றும் வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

1 More update

Next Story