போதைப்பொருளை ஒழித்து மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


போதைப்பொருளை ஒழித்து மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 4 Sept 2024 9:17 PM IST (Updated: 4 Sept 2024 9:20 PM IST)
t-max-icont-min-icon

காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதைப்பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் குறித்தும், இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சீரழிவது குறித்தும் "தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது; தி.மு.க. அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கவேண்டும்" என 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளேன்.

அப்போதே உரிய நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் புழக்கத்தை தடுத்திருந்தால், இன்றைய தினம் மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டு இருக்காது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட செய்திகள் வந்துள்ளன.

இச்சோதனையின் ஊடாக, மாணவர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியதால் மன அழுத்தத்தில் தவறான முடிவெடுக்க முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகவும் வருத்தத்துக்குரியது.

இனியாவது இந்த தி.மு.க. அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதைப்பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story