அரசு பஸ்சில் பாம்பு... பயணிகள் அலறியடித்து ஓட்டம்


அரசு பஸ்சில் பாம்பு... பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 29 July 2024 3:53 AM IST (Updated: 29 July 2024 3:54 AM IST)
t-max-icont-min-icon

பாம்பு இருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

திருப்பத்தூர்,

நடிகர் வடிவேலு நடித்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சி ஒன்றில் பாம்பாட்டி ஒருவர் பாம்பை பஸ்சில் மறந்து விட்டு விடுவார். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் ஓட்டம் பிடிப்பார்கள். இது சினிமாவில் வந்த காட்சி என்று தானே நினைத்து இருப்பீர்கள். பாருங்கள் நிஜத்திலும் அதுபோன்ற சம்பவம் திருப்பத்தூர் அருகே நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருப்பத்தூரில் இருந்து நேற்று முன்தினம் காலை அரசு பஸ் ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. குனிச்சி அருகே பள்ளாளப்பள்ளி கூட்ரோடு பகுதியில் வந்த போது பஸ்சின் நடுப்பகுதியில் ஒரு சீட்டில் புஸ், புஸ் என்று ஒரு சத்தம் கேட்டது.

இதனால் பயணிகள் சத்தம் வந்த இடத்தில் பார்த்தபோது பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே பாம்பு, பாம்பு என்று பயணிகள் கூச்சல்போடவே பஸ்சில் இருந்த சக பயணிகள் பஸ்சை நிறுத்தும்படி சத்தமிட்டனர்.

பாம்பு இருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதைத்தொடர்ந்து பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி பாம்பு, பாம்பு என்று கூச்சல் போட்டனர்.

பயணிகளின் சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் இருந்த சில இளைஞர்கள் கம்புடன் பஸ்சுக்குள் ஏறி பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாம்பு ஒரு சீட்டில் பதுங்கி இருந்தது. அதனை அடித்து பஸ்சில் இருந்து கீழே கொண்டு வந்து சாலையில் போட்டு கொன்றனர். அதன்பின் பயணிகள் பஸ்சில் ஏறினர். இதைத்தொடர்ந்து பஸ் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.

1 More update

Next Story