மதுபோதையில் ஏற்பட்ட விபத்தில் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு? - தமிழக அரசு விளக்கம்

கோப்புப்படம்
கடந்த ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 12,306 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
"நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகளில் 18,844 பேர் இறந்துள்ளனர். அதில், 12 ஆயிரம் பேர் மது குடித்து சாலை விபத்தில் இறந்துள்ளனர் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதேபோல, தமிழ்நாடு மாநில குற்ற ஆவண காப்பகமும் வெளியிட்ட அறிக்கையில் சாலை விபத்துகளில் 18,074 பேர் இறந்துள்ளனர். அதில் 13,500 பேர் மதுபோதையில் சாலை விபத்தில் இறந்துள்ளனர்" என்று கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இது முற்றிலும் பொய்யான தகவல். கடந்த 2024-ம் ஆண்டு மத்திய மந்திரி நிதின் கட்கரியின் உரையில், தமிழ்நாட்டில் 12 ஆயிரம் பேர் மது குடித்து சாலை விபத்தில் இறந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. 2022-ம் ஆண்டில் மது குடித்து நிகழ்ந்த சாலை விபத்துகளில் இந்திய அளவில் மொத்தமே 10,080 விபத்துகளும், 4,201 இறப்புகளும் நடந்துள்ளன.
இதேபோல், மாநில குற்ற ஆவண காப்பக அறிக்கையிலும் 13,500 பேர் இறந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை. கடந்த 2024-ம் ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 12,306 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கையை வைத்து 12 ஆயிரம் பேர் மதுபோதையில் சாலை விபத்தில் இறந்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






