காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் போக்குவரத்து மாற்றம்


காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு - மெரினாவில் போக்குவரத்து மாற்றம்
x

கோப்புப்படம் 

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை

காணும் பொங்கலான இன்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல், மக்கள் மகிழ்ச்சியுடன் இப்பண்டிகையை கொண்டாடும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக 1,500 ஊர்க்காவல் படை வீரர்களும் இப்பணியில் ஈடுபடுகிறார்கள்.

மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையில் 3 இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளையும், 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்களையும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக கண்காணிப்பு உயர் கோபுரங்களையும் போலீசார் அமைத்துள்ளனர். கூடுதலாக 13 சி.சி.டி.வி. கேமராக்களையும் போலீசார் பொறுத்தி உள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி மெரினாவில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அவர்கள் கையில் அடையாளப் பட்டை (பேண்ட்) கட்டிவிடும் பணியையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 'டிரோன்' கேமராக்களும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 4 'டிரோன்' கேமராக்களும் என மொத்தம் 8 கேமராக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிக திறன் கொண்ட 'ஏ.ஐ' டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவை மூலமாகவும் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கைத் தகவல்களை ஒலிபரப்பி வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் இன்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம், பந்தயத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் இன்று போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையை மேற்கொள்ள உள்ளனர்.

காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை 11 மணி முதல் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் மாநகர பேருந்துகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை கடற்கரை சாலை, சென்னை பல்கலைக்கழகம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம் பறக்கும் ரெயில் நிலையம், 5.லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி மகளிர் கல்லூரி, சீனிவாசபுரம் லூப் சாலை (பேருந்துகள் மட்டும்), பொதுப்பணி துறை மைதானம், செயின்ட் பீட்ஸ் மைதானம், அன்னை சத்யா நகர், ஈ.வே.ரா சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம், மாநில கல்லூரி ஆகிய இடங்களில் நிறுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story