சென்னையில் 16 வயது சிறுமிக்கு அரிவாள் வெட்டு

மதன்குமார் என்பவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் கடந்த 16-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் மதன்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தம்பி மீது புகார் அளித்ததால் ஆத்திரத்தில் இருந்த அவரது அண்ணன் பாபு அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சிறுமிக்கு பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சிறுமி நிலைகுலைந்து சரிந்து விழுந்தாள். இதனையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட பாபு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாபுவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






