மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி தவெக 2-வது மாநில மாநாடு - விஜய் அறிவிப்பு


மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி தவெக 2-வது மாநில மாநாடு -  விஜய் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 July 2025 10:08 AM IST (Updated: 16 July 2025 10:23 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநாட்டை தவெக தலைவர் விஜய் நடத்தினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. அதைபோல தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.

தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க கட்சியின் செயற்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் கடந்த 4-ம் தேதி நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். விஜய், சீமானின் அறிவிப்புகளால் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.

முன்னதாக நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று (புதன்கிழமை) அதிகாலை நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாநாட்டுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

இந்தநிலையில், தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தவெக 2-ம் மாநாடு மதுரையில் ஆகஸ்டு 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி என பதிவிட்டுள்ளார்.

மாநாட்டிற்கு 70 முதல் 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பூமி பூஜை முடிந்து அடுத்தடுத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story