பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

ஆறுமுகநேரியில் பள்ளி அருகில் 3 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் இருந்து 14.7 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பஜார் அடுத்த பேயன்விளை பள்ளி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் 3 பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த சிறுவர்கள் உள்பட சிலருக்கு ரகசியமாக எதையோ விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர்.
உடனே அங்கு சென்ற போலீசார், அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருச்செந்தூர் அம்மன்புரம் அருகே நீல்புரத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் ஜெபராஜ் கிறிஸ்டோபர் (வயது 60), குரும்பூர் மேலபுதுகுடி தெற்கு தெருவை சேர்ந்த ஸ்ரீராமச்சந்திரன் மகன் அருண்(38), காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமார்(43) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 14 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் திலீபன் விசாரணை நடத்தி 3 பேரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திவிட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். இதில் ஜெபராஜ் கிறிஸ்டோபர் மீது திருச்செந்தூர், குரும்பூர், எப்போதும்வென்றான், ஆறுமுகநேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, புகையிலை பொருட்கள், சட்ட விரோதமாக மது விற்பனை உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






