தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்; கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மறைந்த கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி (அ.தி.மு.க.) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும், கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
இந்நிலையில், நேற்று 2-ம் நாள் தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. பின்பு, கேள்வி நேரம் தொடங்கி நடந்தது. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவையில் பேசினர். தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.
கரூர் பரப்புரைக்கு த.வெ.க. கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணிநேரம் தாமதமாக த.வெ.க. தலைவர் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறினார். எனினும், சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க அரசு தவறிவிட்டது என கூறினார்.
தொடர்ந்து, இரு கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. கூட்டத்திற்கு கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.
பா.ம.க.வின் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடாவை மாற்றும்படி சபாநாயகரிடம் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், சபாநாயகர் அப்பாவு இதனை இன்னும் ஏற்கவில்லை. இதனால், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.






