சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது


சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2025 10:34 AM IST (Updated: 8 Aug 2025 11:19 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை தீர்த்துக்கட்டியதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்குப்பழி வாங்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

படுகொலை செய்யப்பட்ட ரவுடியின் பெயர் புளூகான் ராஜ்குமார் (வயது 37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ‘பி' பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். சமீப காலமாக இவர் ரவுடி தொழிலை விட்டு விலகி சாவு நிகழ்ச்சிகளுக்கு சாமியானா பந்தல் அமைக்கும் தொழிலை செய்து வந்தார்.

அ.தி.மு.க.விலும் இவர் நிர்வாகியாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிற்பகல் மதிய உணவு சாப்பிடுவதற்காக இவர் வீட்டிற்கு வந்தார்.

அப்போது, ஏராளமான இளைஞர்கள் கையில் அரிவாளுடன் ராஜ்குமாரின் வீட்டுக்கு வந்தனர். 4 பேர் வீட்டுக்கு வெளியே நின்றார்கள். 5 பேர் மட்டும் வீட்டுக்குள் புகுந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், 5 பேர் கும்பல் அவரை மடக்கி அரிவாளால் வெட்டினார்கள்.

ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரை வெட்டிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த யுவனேஷ் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் இந்த கொலைவழக்கு தொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அவருடைய நண்பர்கள் 2 பேரும் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ஆவார்கள். 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராஜ்குமாரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவர் யுவனேஷ் பரபரப்பு தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நான் 2 வயது குழந்தையாக இருந்தபோது, எனது தந்தை செந்தில்குமார் அமைந்தகரையில் வைத்து கொலை செய்யப்பட்டார். அப்போது நான் ஒன்றும் அறியாத குழந்தை. தற்போது நான் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறேன். எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இறந்துவிட்டனர்.

2 பேர் கொலை செய்யப்பட்டனர். எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ராஜ்குமாரும் ஒருவர். அவர் 2021-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலையானார்.

என்னை பொறுத்தமட்டில் எனது தந்தை கொலை செய்யப்பட்டதை பெரிதுப்படுத்தாமல் வாழ்ந்து வந்தேன். ஆனால் ராஜ்குமார் என்னை பார்க்கும் போதெல்லாம் உன் தந்தையை நான்தான் கொன்றேன் என்று எனது மனதில் பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி வந்தார். ராஜ்குமாரை பொறுத்தமட்டில் அவரது சாவை அவரே தேடிக்கொண்டார். அடிக்கடி என்னை சீண்டியதால் நானும், எனது நண்பர்களும் ராஜ்குமாரை போட்டுத்தள்ள முடிவு செய்தோம்.

இதற்கிடையில் ஒரு அடிதடி வழக்கில் போலீசார் என்னை சேர்த்துவிட்டனர். எனது தந்தை இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அவரை தீர்த்துக்கட்டிய ராஜ்குமாரை இப்போதுதான் தீர்த்துக்கட்டினேன். எனக்காக எனது நண்பர்களும், என்னுடன் இணைந்து இதனை செய்தார்கள்” என்று யுவனேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து யுவனேசும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடி வந்தநிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் இதுவரை 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story