போலீஸ் நிலையத்தில் ருசிகரம்: அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்து வைக்கக்கோரி வாலிபர் ரகளை


போலீஸ் நிலையத்தில் ருசிகரம்: அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்து வைக்கக்கோரி வாலிபர் ரகளை
x

அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய தமிழ்ச்செல்வனுக்கு அவர் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 35 வயது இளம்பெண், திருமணமாகி சூளைமேடு பகுதியில் தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன்(வயது 30) என்ற வாலிபர் வசித்து வந்தார்.இதனால் திருமணமான பெண்ணுடன், தமிழ்ச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய தமிழ்ச்செல்வனுக்கு அவர் மீது ஒருதலை காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவரை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறும், நாம் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழலாம் என்றும் அந்த பெண்ணிடம் தமிழ்ச்செல்வன் கூறினார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், "நீ பேசுவது தவறு. எனக்கு திருமணமாகி விட்டது. பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்" என்று அறிவுரை கூறினார். அதன்பிறகு அவர் தமிழ்ச்செல்வனுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்ச்செல்வன், இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று, "எதற்காக என்னுடன் பேச மறுக்கிறாய்?" என்று கேட்டு தகராறு செய்து, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த இளம்பெண் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தமிழ்ச்செல்வனை போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர்.விசாரணையில் தமிழ்ச்செல்வன், திருமணமான பெண் என தெரிந்தும், அவர் மீது ஒரு தலை காதல் கொண்டு, அவருடன் பேசி பழகி திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வனிடம், "நீ திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அடுத்தவரின் மனைவி மீது ஆசைபடகூடாது. உன்னால் அந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும். அதைவிட்டு விட்டு ஒதுங்கிவிடு" என அறிவுரை கூறினர்.

ஆனால் அதை ஏற்க மறுத்த தமிழ்ச்செல்வன், "அந்த பெண்ணை என்னால் மறக்க முடியவில்லை. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது பற்றி எனக்கு கவலையில்லை. அந்த பெண் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று கூறி போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story