படிப்பதாக கூறி காதலனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்.. காதல் கசந்ததால் எடுத்த விபரீத முடிவு

representation image (Meta AI)
மலேசியாவில் அந்த பெண் இருப்பதாக நினைத்து, மாதமாதம் அவருக்கு குடும்பத்தினர் பணமும் அனுப்பி வைத்தனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 75). ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன். இதில் 5-வது மகளான திவ்யா (28) எம்.எஸ்சி. படித்துள்ளார். மலேசியாவுக்கு சென்று மேற்படிப்பு படிக்கப்போவதாக வீட்டில் கூறி இருக்கிறார். அதுசம்பந்தமான தகவல்களையும் வீட்டில் காண்பித்து உள்ளார். தன் மகள் மலேசியாவில் உயர் படிப்புக்கு செல்வதை தர்மராஜ் மிகவும் பெருமையாக மற்றவர்களிடம் கூறினார்.
படிப்புக்கு முதலில் ரூ.5 லட்சம் வரை கட்ட வேண்டும் என்றும், மதுரையில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து விமானத்தில் மலேசியா செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறி, அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவது போல் இருந்ததால் திவ்யாவின் செயல்பாடுகளில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
படிப்பில் சேர தந்தை கொடுத்த ரூ.5 லட்சம் மற்றும் பயணச்செலவு, தங்குவதற்கான ஏற்பாடுகள் என பெரும் தொகையை வீட்டில் வாங்கிக்கொண்டு, வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு திவ்யா சென்றுள்ளார். இது நடந்தது சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு.
வீட்டில் எல்லோரும் திவ்யா மலேசியாவில் இருப்பதாகத்தான் நினைத்து இருந்தனர். மாதமாதம் அவருக்கு பணமும் அனுப்பி வைத்தனர். ஆனால், திவ்யா மலேசியாவுக்கு செல்லாமல் மதுரையில்தான் இருப்பதாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் போன் மூலம் தெரியவந்தது.
அந்த போனில் பிரகாஷ் (30) என்பவர் பேசி இருக்கிறார். திவ்யாவுக்கும் எனக்கும் திருமணம் ஆகிவிட்டது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. நாங்கள், உள்ளூரில்தான் இருக்கிறோம். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளோம். அவர் உயிருக்கு போராடுகிறார் என்று கூறிவிட்டு, போனை வைத்துள்ளார்.
இதைக்கேட்டு தர்மராஜ் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரித்தபோது, திவ்யாவும், பிரகாசும் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். குழந்தை பிறந்த பின்பும் அதுபற்றி பெற்றோரிடம் திவ்யா கூறவில்லை. ஆனால், வீட்டில் உள்ளவர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசி உள்ளார். விரைவில் ஊருக்கு வருவதாகவும் கூறி இருக்கிறார்.
மகளின் மலேசிய நாடகம் தெரிந்த நிலையில் அதுபற்றி தர்மராஜ், தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரகாசை பிடித்து விசாரித்தபோது அவர், மதுரை கப்பலூரில் உள்ள ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
சமீபகாலமாக பிரகாசுக்கும், திவ்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் அவரது காதல் வாழ்க்கை கசந்தது. அவரால் பெற்றோரிடம் செல்ல முடியவில்லை. நிலைமையை சொல்லவும் முடியவில்லை. குழந்தையுடன் நாட்களை நகர்த்திய நிலையில், விபரீத முடிவு எடுத்து சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மகள் தற்கொலை குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் தர்மராஜ் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திவ்யாவின் விபரீத முடிவால் அவருடைய 2 வயது குழந்தை மிகவும் பரிதவித்து வருவது தெரியவந்துள்ளது.






