போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதி


போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதி
x
தினத்தந்தி 9 Aug 2025 1:39 AM IST (Updated: 9 Aug 2025 5:53 AM IST)
t-max-icont-min-icon

அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரண நிதியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கிராமத்தில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் கடந்த 1.7.2025 அன்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அப்போது, இந்த சம்பவத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார். அதன்படி, சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், 2.7.2025 அன்று கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை, மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு (வயது 27) வழங்கினார். சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் (காரைக்குடி) டெக்னீசியன் பணியிடத்திற்கான உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

அக்குடும்பத்தினரின் கோரிக்கைகளின்படி, மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தில் பணி நியமன ஆணையை மாற்றி வழங்கவும், முன்னதாக அக்குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா தொடர்பாக, மாற்று இடம் வேண்டி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாகவும், உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் - மேற்கொண்டு வருகிறது.

மேலும், 14.7.2025 அன்று அமைச்சர் பெரியகருப்பன், அக்குடும்பத்தினருக்கு ரூ.7.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். அதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவிற்கிணங்க, தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிவாரண நிதி ரூ.25 லட்சத்திற்கான காசோலையை நேற்று அமைச்சர் பெரியகருப்பன் அக்குடும்பத்தினரிடம் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

மாவட்ட கலெக்டர் பொற்கொடி தலைமையிலும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலையிலும் நடந்த இந்த நிகழ்வின்போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் உடனிருந்தனர்.

1 More update

Next Story