த.வெ.க.வுடன் கூட்டணியா?: 5 மாதத்தில் அமைச்சராக போகிறீர்கள் - அன்புமணி பேச்சால் நிர்வாகிகள் குஷி


த.வெ.க.வுடன் கூட்டணியா?: 5 மாதத்தில் அமைச்சராக போகிறீர்கள் - அன்புமணி பேச்சால் நிர்வாகிகள் குஷி
x

அன்புமணி பேசியுள்ளதன்படி பார்க்கும்போது கடைசி நேரத்தில் அவர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடும் என தெரிகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கடசிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், இளைஞர் சங்கம் , மாணவர் சங்கம் மற்றும் மகளிர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, இன்னும் 5 மாதங்களில் நீங்கள் எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ ஆக போகிறீர்கள். அதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலோட்டமாக இருந்தால் வேலைக்காகாது என பேசினார். பா.ம.க. நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி பேசியது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அவர் தனித்து போட்டியிடும் சாத்தியம் குறைவு. கூட்டணி அமைக்கும் பட்சத்தில், அவருடைய கட்சியினர் அமைச்சர் ஆவது என்பது த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும்போது மட்டுமே சாத்தியம் ஆகும். அதற்கேற்ப, த.வெ.க. தலைவர் விஜய்யும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், பா.ம.க.வுக்கு அமைச்சர் பதவி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.

ஏனெனில், இதுவரை தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது புதிதான ஒன்று. எந்த ஆளுங்கட்சியும் இதற்கு இதுவரை முன்வரவில்லை. கூட்டணி கட்சிகளும் அதனை பெரிய அளவில் முன்னெடுத்து பேசவில்லை. இந்த சூழலில், அன்புமணி பேசியுள்ளதன்படி பார்க்கும்போது கடைசி நேரத்தில் அவர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடும் என தெரிகிறது. அப்போதுதான், அக்கட்சியினர் எம்.எல்.ஏ. ஆவதுடன், அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

அதனுடன் வேறு சில கட்சிகளும் கூட அந்த கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கலாம். இதனால், தமிழக சட்டசபை தேர்தலின்போது, த.வெ.க. தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story