அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை: டிஜிபி உத்தரவு


அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி இல்லை: டிஜிபி உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2025 10:13 PM IST (Updated: 25 July 2025 11:48 PM IST)
t-max-icont-min-icon

இரு தரப்பு இடையே மோதல் ஏற்படும் என்பதால் அனுமதி அளிக்கக் கூடாது என்று மாவட்ட எஸ்.பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டாக்டர் ராமதாசின் பிறந்தநாளான ஜூலை 25-ந் தேதி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைப்பயணம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கினார்.100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்த பயணத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்தார்.'நான்தான் பா.ம.க. நிறுவனர். எனது அனுமதி இல்லாமல் பா.ம.க. கொடியை யாரும் பயன்படுத்த கூடாது. அன்புமணி நடைபயணம் பா.ம.க.வில் மேலும் குழப்பத்தை உண்டாகும்.சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். எனவே அவருடைய இந்த பயணத்துக்கு போலீசார் அனுமதி வழங்க கூடாது. தடை விதிக்க வேண்டும்' என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story