ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆந்திர வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே ரெயில் சென்றபோது சிறுமி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
சேலம்,
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது 9 வயது மகளுடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் சென்றபோது அவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் லுவாரம் பலமனேரி ரோடு பகுதியில் வசித்து வரும் பாபு என்பவரின் மகன் குமார் (வயது 30) என்பவர் மது போதையில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
உடனே சிறுமி கத்தி கூச்சலிட்டு உள்ளாள். அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் அங்கிருந்து வேறு பெட்டிக்கு சென்று விட்டார். சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொந்தரவு செய்ததாக கூறினார். இதனையடுத்து அந்த வாலிபரை தேடிபிடித்து தர்ம அடி கொடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வந்ததும் அவர்களிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






