திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்.. தந்தையுடன் தகராறு.. என்ஜினீயர் செய்த கொடூரம்

திருமணம் செய்து வைக்க தாமதம் செய்து வந்ததால் மகனுக்கும், தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை கணபதிபுரம் முனுசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவலிங்கம் (வயது 76). இவரது மகன் நிரோஷன் (41). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் திருமணம் செய்து வைக்க தாமதம் செய்து வந்ததால் மகன் நிரோஷனுக்கும், தந்தை சிவலிங்கத்துக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் தந்தை, மகன் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று காலை பெங்களூருவில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்கு நிரோஷன் வந்துள்ளார். அப்போது தந்தை, மகன் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், அவரது தாய் வெளியே சென்று இருந்த நேரம் பார்த்து வீட்டின் முதல் மாடிக்கு சென்ற நிரோஷன், அங்கு படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த சிவலிங்கத்தின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் தந்தையை கொலை செய்த மகன் நிரோஷனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






