வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு


வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

சென்னை,

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போன்று, நாளை (செவ்வாய்க்கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்பிறகு அது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்காக நகர்ந்து வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? என்பது அடுத்தடுத்த அறிவிப்பில் தான் தெரியவரும்.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக வடதமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் பட்சத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story