சட்டசபை தேர்தல்; கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் பணிகள் குறித்து தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்படி, கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு தி.மு.க.வினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோன்று, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறி போகும் என கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட செயலாளரை முதல்-அமைச்சர் எச்சரித்து உள்ளார்.






