வெடிகுண்டு வீசி பாமக பிரமுகரை கொல்ல முயற்சி.. கும்பகோணத்தில் பரபரப்பு

வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின். இவர் பாமகவை சேர்ந்தவர் ஆவார். இவர் இன்று அலுவலகத்தில் தனது வழக்கமான பணிகள் மேற்கொண்டு வந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுகளை வீசியது. அத்துடன், அங்கிருந்தவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியது. இதில் பேரூராட்சி அலுவலக கண்ணாடி, கதவுகள் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாக ம.க.ஸ்டாலின் உயிர் தப்பினார்.
இந்த நிலையில், ம.க.ஸ்டாலின் மீதான கொலை முயற்சியை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் சாலைகளில் டயர்களை கொளுத்திப் போட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும், 30க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை எஸ்.பி. சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






