அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை


அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
x

கோப்புப்படம் 

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு.

ஏற்கனவே, கடந்த மே மாதம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 கல்லூரிகளில், போதிய மருத்துவர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தனது பங்குக்கு ஒரு விளம்பர நாடகத்தை அரங்கேற்றுவதோடு, தனது பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறார். இதனால், பாதிக்கப்பட்டது, ஏழை எளிய பொதுமக்களே.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவமனை வளாகம், போதிய மருத்துவர்கள், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story