பெங்களூரு பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டத்தை கைவிடக் கூடாது - வானதி சீனிவாசன்

கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பெங்களூரு பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டத்தை கைவிடக் கூடாது - வானதி சீனிவாசன்
Published on

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கர்நாடக மாநில தலைவர் பெங்களூரு மாநகரில் இருந்து தமிழ்நாடு எல்லையான பொம்மசந்திரா வரை மெட்ரோ ரெயில் சேவையை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால், பெங்களூரு - ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

பொம்மசந்திரா மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் சேவையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசுடன் கர்நாடக மாநில அரசு பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. பெங்களூரு மாநகரும், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ஓசூரும் மெட்ரோ ரெயிலால் இணைக்கப்பட்டால் பெரும் வளர்ச்சிக்கு வித்திடும். மக்களின் போக்குவரத்தும் எளிதாகும். அதனால், இரு மாநில மக்களும் எப்போது பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரெயில் சேவை வரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால், ஓசூர் வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டால், ஓசூருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். ஓசூரில் தொழில் தொடங்க அதிகமான நிறுவனங்கள் முன்வரும் எனக்கூறப்படுவதால், இத்திட்டத்தை கைவிட கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடியவை. மெட்ரோ ரெயில் என்பது வளர்ச்சிக்கு மிகமிக அவசியமானவை. எனவே, திட்டமிட்டபடி பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடர வேண்டும். இதனால் இரு மாநிலங்களுக்கும் பெரும் நன்மை ஏற்படும். இந்த விஷயத்தில் திமுக அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் இருப்பது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி. கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள். கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும். எனவே, முதல்-அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக, கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவுடன் பேசி பொம்மசந்திரா - ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டத்தை திட்டமிட்டவாறு முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com