காஷ்மீரில் வாட்டி வதைக்கும் குளிர்; 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் வெப்பநிலை சரிவு

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 4.5 டிகிரியாக பதிவாகி காஷ்மீரில் கடுமையான குளிர் நிலவுகிறது.
காஷ்மீரில் வாட்டி வதைக்கும் குளிர்; 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் வெப்பநிலை சரிவு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காஷ்மீரில் 2007-ம் ஆண்டுக்குப்பிறகு மிகக் கடும் குளிர் நிலவி வருகிறது.

குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த ஒருவாரமாக வெப்பநிலை மைனஸ் டிகிரியாக குறைந்து உள்ளது. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அங்கு உறைபனிக்குக் கீழே சரிந்துள்ளன. நேற்று  அங்கு குளிர் மைனஸ் 4.5 டிகிரியாக பதிவானது. அந்தவகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன.கடுமையான பனிப்பொழிவு காரணமாகப் பல இடங்கள் வெண்பனியால் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் செடிகள், மரங்களின் இலைகள் கண்ணாடி இழைகள் போல் உறைந்து காணப்படுகின்றன.

காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் இரவு வெப்பநிலை குறைந்ததால் காஷ்மீரில் குளிர் அலைகள் தீவிரமடைந்துள்ளன. பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளை, குறிப்பாக நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளை மூடுபனி சூழ்ந்தது.தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 6.6 டிகிரியாக இருந்தது.பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காசிகுண்டில் குறைந்தபட்சம் மைனஸ் 3.0 டிகிரியாகவும் பதிவாகியிருக்கிறது.

இதேபோல வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் மைனஸ் 5.0 டிகிரியாகவும், தெற்கு காஷ்மீரின் கோகர்நாக்கில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1.2 டிகிரியாகவும் பதிவானது. அமர்நாத் யாத்திரை முகாமாக செயல்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 5.6 டிகிரியாகவும் குல்மார்க்கில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1.4 டிகிரியாகவும் பதிவாகியிருந்தது. கடுமையாக குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. பிரசித்தி பெற்ற தால் ஏரி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com