பா.ஜ.க. கூட்டணி வளையத்துக்குள் அ.தி.மு.க., பா.ம.க. - அமித்ஷா நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்

தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி மலரும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நடைபெறும் நிகழ்வுகளும் அமைந்துள்ளன. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதி சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
அங்கு விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், "டெல்லியில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்" என்று தெரிவித்தார். ஆனால், அன்று இரவே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மாற்றினால் தங்களுடன் கூட்டணி அமைக்க சம்மதம்" என எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரபரப்பாக கூறப்பட்டது.
அதன்பிறகு, தனது 'எக்ஸ்' தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்த மத்திய மந்திரி அமித்ஷா, "2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று கூறியிருந்தார். இதனால், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததை ஓரளவு யூகிக்க முடிந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி அமித்ஷா, "அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்போம்" என்று அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே உறுதியாக கூட்டணி மலரும் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் மாற்றப்பட இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் மத்திய மந்திரி அமித்ஷா இன்று இரவு 10.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வர இருக்கிறார். ஆனால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இன்று இரவே அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை அமித்ஷா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்துக்கு சென்று அவரை சந்திக்க இருக்கிறார். தொடர்ந்து, நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பி வரும் அவர், தமிழக பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. செயல் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை அவர் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க., பா.ம.க. இணைவது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், இன்று காலை பா.ம.க.வில் பெரிய பிரளயமே ஏற்பட்டது. பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாசை தூக்கிவிட்டு நானே தலைவர் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து விட்டார். அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு டாக்டர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்ததாகவும், அந்த பிரச்சினையினாலேயே அன்புமணி ராமதாஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், தமிழக அரசியலில் நாளை ஒரு முக்கியமான நாள் என்பது மட்டும் தெரிகிறது. என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.