பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
கூட்டணி, பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணி அமைத்துள்ளன. அதேவேளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு , டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக விலகின. அதேவேளை, இந்த இரு கட்சிகளையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சித்து வருகிறது.
அதன்படி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன் தினம் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவையில் உள்ள அண்ணாமலை வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அண்ணாமலை நேற்று இரவு திடீர் பயணமாக கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்திய அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கூட்டணி குறித்த ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனின் நிலைப்பாடு குறித்து பாஜக தலைமையிடம் அண்ணாமலை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






