‘போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்களின் கார் பறிமுதல்’ - ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தகவல்

தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம் என ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தாக்குதலில் இருந்து 4 காவலர்கள் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரவுடி வெள்ளை காளியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பில் அழைத்து வரப்பட்ட குற்றவாளியை பின்தொடர்ந்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களின் காரை கடலூர் அருகே பறிமுதல் செய்துள்ளோம். திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூரில் காரை நிறுத்திவிட்டு வேறு காரில் தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.






