விஜய் கூட்டத்துக்கு பாரபட்சம் காட்டக்கூடாது என்று வழக்கு.. ஐகோர்ட்டில் இன்று விசாரணை?

கோப்புப்படம்
பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருச்சியில் நடந்த பிரசாரத்தின் போது போலீஸ் தரப்பில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ரோடு ஷோ போன்றவைகளுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது இல்லை. ஆனால், எங்களது கட்சிக்கு மட்டும் போலீசார் கடுமையான நிபந்தனைகள் விதிக்கின்றனர். எனவே, விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலித்து அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி டி.ஜி.பி.க்கு ஆணையிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






