இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

திருமண ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் கடந்த 2011-ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். 2013-ம் ஆண்டு அந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்னர் அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜாவிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என கூறி மாத்திரையை கொடுத்துள்ளார். அதன்பிறகு அவர் மாத்திரையை சாப்பிட்டு கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனாலும் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ராஜா ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜா, அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






