தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை


தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ  அதிகாரிகள் விசாரணை
x

தவெக தலைமை அலுவலக ஊழியர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர்,

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பிரசாரத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மேலும் கடந்த 6 மற்றும் 7-ந்தேதிகளில் 17 தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 8 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே விசாரணைக்கு ஆஜரான ஒருசிலர் நேற்றைய விசாரணைக்கும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சென்று கரூரில் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சி பதிவுகளை ஒப்படைக்க வேண்டும் என சம்மன் அளித்திருந்தனர்.

இதையடுத்து, த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக த.வெ.க. நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் நேற்று தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு மதியம் 12.30 மணியளவில் வருகை தந்தனர். அப்போது அவர்கள், விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் குரு சரண், சிபிஐ முன்பு ஆஜராகினார். விஜய்யின் பிரசார வாகன காட்சிகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

1 More update

Next Story