சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டத்தின்போது, துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக கொண்டு வர வேண்டும் என அலுவலர்களை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில், முதல்-அமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வன விலங்குகளுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென மூன்று உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோவை, நெல்லை மற்றும் திருச்சி மாவட்டங்களில் அமைப்பது குறித்தும், சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்தும், மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம், தஞ்சை மாவட்டம், மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம், திண்டுக்கல் வனக்கோட்டம், அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம், பழவேற்காடு ஏரிப்பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்துவது போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தின்போது, முதல்-அமைச்சர் இந்த துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் எல்லாவற்றையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இக்கூட்டங்களில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, பொதுப்பணி துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை முதன்மை செயலாளர் த. உதயச்சந்திரன், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






